கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லுக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது


கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லுக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது
x
தினத்தந்தி 17 Aug 2018 4:45 AM IST (Updated: 17 Aug 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது இதனால் 15 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

பென்னாகரம்,

கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. தொங்குபாலத்தை தொட்டவாறு தண்ணீர் ஓடுகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் சத்திரம், முதலைப்பண்ணை பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் ஊட்டமலை, ஆலாம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தண்ணீர் புகுந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் ஒகேனக்கல் பஸ்நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்களை மடம் சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஒகேனக்கல், நாடார் கொட்டாய், நாகர்கோவில், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையில் ஆலாம்பாடி பகுதியில் சாலையை காவிரி வெள்ளம் அடித்து சென்றதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

Next Story