ரபேல் போர் விமான ஊழலை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் ப.சிதம்பரம் பேச்சு


ரபேல் போர் விமான ஊழலை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 17 Aug 2018 4:00 AM IST (Updated: 17 Aug 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான ஊழலை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

நகர் தலைவர் பிரபாகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது நடைபெற்று வரும் பாரதீய ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமான ஊழல் என்பது மிகப்பெரிய ஊழல் ஆகும். இந்த உண்மையை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும். மேலும் இந்திய பொருளாதாரம் இன்று மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். இதற்கு பாரதீய ஜனதா அரசு தான் காரணமாகும்.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் 43 பேர் இதுவரை வன்கொடுமையினால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாடு, ஒரே மதம் என்று கூறி வரும் பாரதீய ஜனதா கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக வாய் கூசாமல் சொல்கிறார். இது இந்திய மக்களை ஏமாற்றும் செயலாகும். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு காரணமாக கருப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகரன், சுந்தரம், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் சண்முக ராஜன், மகளிர் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ஸ்ரீவித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story