காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருப்பராய்த்துறையில் 9 குடிசைகள் நீரில் மூழ்கின


காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருப்பராய்த்துறையில் 9 குடிசைகள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருப்பராய்த்துறையில் 9 குடிசைகள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்கள் சமூக நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜீயபுரம்,

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் திருச்சி முக்கொம்பு மேலணை கடல் போல் காட்சி அளிக்கிறது. முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 210 கன அடி தண்ணீர் வந்தது. பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் காவிரியின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் நேற்று காவிரியின் கரையோரத்தில் இருந்த 9 குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. ஊராட்சிக்கு சொந்தமான மின்சார மோட்டார் அறையும் தண்ணீரில் மூழ்கி விட்டது. 9 குடிசைகளிலும் வசித்து வந்த 25 பேர் திருப்பராய்த்துறையில் உள்ள சமூக நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், உணவும் வழங்கப்பட்டது.

முக்கொம்பு மேலணையில் இருந்து அய்யன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடியும், பெருவளை, புள்ளம்பாடி வாய்க்கால்களில் வினாடிக்கு தலா 400 கன அடி தண்ணீரும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. 

Next Story