37 மீனவ கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


37 மீனவ கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:34 AM IST (Updated: 17 Aug 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் மீன்வளத்துறையை கண்டித்து 37 மீனவ கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர், 


சுருக்குவலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் கடலில் சிலர் தடையை மீறி சுருக்கு வலையை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. அவ்வாறு தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சித்திரைப்பேட்டை, சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, தைக்கால்தோணித்துறை, சலங்குகாரத்தெரு, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பட்டறைஅடி, சின்னவாய்க்கால், முடசல் ஓடை, அன்னப்பன்பேட்டை உள்பட 37 மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தடையை மீறி சுருக்குவலையை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையை கண்டித்து கடலூர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என 37 மீனவ கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை கடலூர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு கருப்புக்கொடியை கையில் ஏந்தியபடி ஏராளமான பேர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சோனங்குப்பம் மீனவ கிராம தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, சரவணன், உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீன்வளத்துறையை கண்டித்து 37 மீனவ கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story