காவிரி, பவானி ஆறுகளில் தண்ணீர் திறப்பு: கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது


காவிரி, பவானி ஆறுகளில் தண்ணீர் திறப்பு: கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 16 Aug 2018 11:55 PM GMT (Updated: 16 Aug 2018 11:55 PM GMT)

காவிரி, பவானி ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

பவானி,

பவானி நகரப்பகுதியில் காவிரி ஆறும், பவானி ஆறும் செல்கிறது. பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியும், காவிரி ஆற்றில் 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானியில் புதிய பஸ் நிலைய பகுதி, காவிரி வீதி, தேர்வீதி, பழையபாலம் ஆகிய பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரிது சிரமப்பட்டனர். மேலும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் ஆற்று தண்ணீர் புகுந்தது. இதுபற்றி அறிந்ததும் பவானி வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கூடத்தில் தேங்கி நின்ற தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

காவிரி ஆறு மற்றும் பவானி ஆறு கூடும் இடத்தில் பவானி கூடுதுறை உள்ளது. இந்த கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பவானி மற்றும் காவிரி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது. கோவிலின் படித்துறைகளை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது.

பவானியில் இருந்து பழைய பாலம் வழியாக குமாரபாளையத்துக்கு வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்காக போலீசார் பழைய பாலத்தின் நுழைவு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தியதுடன் அங்கு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் புதிய பாலம் வழியாக பவானியில் இருந்து குமாரபாளையத்துக்கு சென்றுவந்தன.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பவானியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை நேற்று பார்வையிட்டனர். மேலும் பாதுகாப்பான இடங் களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்போது கலெக்டர் பிரபாகர் பொதுமக்களிடம் கூறுகையில், ‘உங்களுடைய பிரச்சினைகளை மனுவாக எழுதி கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பவானி ஐ.ஆர்.டி.டி. கல்லூரி அருகே வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோரம் இலுப்பைத்தோப்பு, ஊஞ்சலூர் அருகே சத்திரப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 92 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பு இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் கொடுமுடி மகுடேசுவரர் கோவில் படித்துறையை மூழ்கடித்தபடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி கோவிலுக்கு செல்லும் ரெயில்வே நுழைவு பாலத்துக்குள்ளும் ஆற்று தண்ணீர் புகுந்தது. இலுப்பைத்தோப்பு, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததும் பற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்தனர்.

இதேபோல் மொடக்குறிச்சி அருகே நஞ்சைகோபி நட்டாற்றீசுவரர் கோவிலை சூழ்ந்தபடி காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு கரையோரங்களில் உள்ள 15 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. உடனே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.


Next Story