வீராணம் ஏரி 47 அடியை எட்டியது


வீராணம் ஏரி 47 அடியை எட்டியது
x
தினத்தந்தி 18 Aug 2018 3:15 AM IST (Updated: 18 Aug 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கீழணையில் இருந்து வடவாற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியை எட்டியது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில், 


கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளன. அந்த தண்ணீர் கடந்த மாதத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் வறண்டு கிடந்த மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது. கீழணைக்கு தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 9 அடி மொத்த கொள்ளளவு கொண்ட கீழணையில் நேற்று 12.5 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலையில் கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீராக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 46.85 அடியாக இருந்தது. நேற்று காலையில் வீராணம் ஏரி 47 அடியை எட்டியது. இதனால் ஏரி, கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை இன்று(சனிக்கிழமை) அல்லது நாளை(ஞாயிற்றுக்கிழமை) எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரியில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 570 கனஅடிநீர் திறந்து விடப்பட்டது இந்த தண்ணீர், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் சேமித்து வைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

Next Story