பரமக்குடி பகுதியில் தொடர் மணல் திருட்டு; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்


பரமக்குடி பகுதியில் தொடர் மணல் திருட்டு; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
x
தினத்தந்தி 17 Aug 2018 10:00 PM GMT (Updated: 17 Aug 2018 7:37 PM GMT)

பரமக்குடி பகுதியில் தொடர் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், அதை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

பரமக்குடி, 


பரமக்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. கமுதக்குடி வைகை ஆறு, சூடியூர் வைகை ஆறு, சுந்தனேந்தல் கண்மாய் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடமும், காவல் துறையினரிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் கூறினர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:- ஏற்கனவே மழையின்றி வறண்டு குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதால் குடிநீர் ஆதாரம் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. நான்கு வழிச்சாலை பணிகள் இன்னும் முடிவடையாததால் இரவு நேரங்களில் மணல் திருடர்கள் அந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

பரமக்குடி பகுதியில் மணல் குவாரி இல்லாத நிலையில் நாள்தோறும் கட்டுமான பணிகளுக்கு மணல் தாராளமாக கிடைக்கிறது. அதிக விலை சொன்னாலும் வேறு வழியின்றி அதையும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மணல் திருட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சரிகட்டிவிட்டு வாடிக்கையாக மணல் அள்ளி வருகின்றனர். பல இடங்களில் மணல்களை குவித்து வைத்து சாக்கு மூட்டைகளில் அள்ளி வைத்தும் விற்கின்றனர்.

இதுகுறித்து கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும் தான் மணல் திருட்டை தடுக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மணல் திருடும் வாகனங்களை போலீசாரும், வருவாய்த்துறையினரும் பிடித்து அபராதம் விதித்தாலும் அந்த தொகையை கட்டி வாகனத்தை மீட்டு வந்து மீண்டும் மணல் திருட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story