நொய்யல் ஆற்றில் 3-வது நாளாக கரைபுரண்டு ஓடும் வெள்ளம்


நொய்யல் ஆற்றில் 3-வது நாளாக கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
x
தினத்தந்தி 18 Aug 2018 3:30 AM IST (Updated: 18 Aug 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நேற்று 3-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாயக்கழிவுகள் கலக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர், 


கேரள, கர்நாடக உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஆறுகள், குளம், குட்டைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சிறுவாணிபகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளம் வந்து கொண்டிருந்தது. இதனால் திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

இதனால் அந்த வழியாக வாகனங்களோ, பொதுமக்களோ செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் நொய்யலில் காலை முதலே அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியபடி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் போலீசார் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர். இதுபோல வளம்பாலத்தை ஒட்டியபடி வெள்ளம் சென்றது. இதனால் அருகே உள்ள சிறிய அளவிலான தரைப்பாலம் மூழ்கியது.

ஆலங்காடு ஆற்றோரத்தில் உள்ள ஒருசில வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்தபடி சென்றது. மேலும், நொய்யலின் கிளை வாய்க்கால்களான ஜம்மனை, சங்கிலிபள்ளம் உள்ளிட்ட ஓடைகளிலும் வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் நொய்யலை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரம்புதூர் தரைப்பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வழியாகவும் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆற்றோரங்களில் செயல்பட்டு வரும் பல சாயமேற்று நிறுவனங்கள், வாஷிங், பிளச்சிங் நிறுவனங்கள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்து விட்டு வருகின்றனர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆலங்காடு பகுதிகளில் நுரையுடன், துர்நாற்றத்தோடு வெள்ளம் சென்றது. மேலும் ஆங்காங்கே அதிக அளவு நுரை தேங்கி நிற்கிறது. வெள்ளப்பெருக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக சாயக்கழிவுகளை கலந்து வரும் நிறுவனங்களை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story