ரூ.4 கோடி நிலம் மோசடி; பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் கைது
ரூ.4 கோடி நிலம் மோசடி வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
இந்த சம்பவம் குறித்து கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-
கோவை கணபதி சத்திரோட்டை சேர்ந்தவர் வேலுசாமி. இவருக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் அந்த பகுதியில் உள்ளது. அதன் அருகில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. சித்தாபுதூரில் உள்ள ஒரு வங்கியில் நண்பர் வாங்கிய கடனுக்கு, துரைசாமி தன்னுடைய நில பத்திரத்தை உத்திரவாதமாக கொடுத்து இருந்தார். கடன் வாங்கியவர் பணத்தை செலுத்தாததால் துரைசாமியின் நிலம் ஏலத்துக்கு வந்தது. இதற்கிடையே போலி ஆவணங்களை தயாரித்து, துரைசாமியின் நிலம் போக, அந்த இடம் அருகில் உள்ள ரூ.4 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தையும் சேர்த்து சிலர் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்துள்ளதாக நில உரிமையாளர் வேலுசாமி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியதாக கோவை கணபதி, வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்த விசாலாட்சி (வயது 40), அவருடைய தந்தை மருதாசலம் (65) ஆகியோரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். வக்கீலுக்கு படித்துள்ள விசாலாட்சி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளராகவும் பொறுப்பில் உள்ளார். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வங்கி மேலாளர், கணபதி பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அதிகாரி, பத்திர எழுத்தர் உள்பட மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதான பள்ளி தாளாளர், மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story