ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:10 PM GMT (Updated: 17 Aug 2018 11:10 PM GMT)

ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கைலாசநாதர் கோவிலில் சமபந்தி விருந்தும் நடந்தது.

ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சி சார்பில் சுதந்திர தினவிழா அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் பாலகுமாரராஜூ வரவேற்றார். இளநிலை பொறியாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் நகராட்சி மேலாளர் இந்திராணி நன்றி கூறினார்.

ராசிபுரம் டவுன் 18-வது வார்டு குஞ்சுமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ராஜகணபதி கோவில் அருகில் பாரதீய ஜனதா சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பாரதீய ஜனதா பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. விழாவில் நகர தலைவர் மணிகண்டன், மாவட்ட தொழில்துறை துணை தலைவர் சேதுராமன், வக்கீல் கார்த்திகேயன், ரகுபதி, கதிரேசன், தங்கவேல், குமார், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி மாளிகையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி தலைமை தாங்கினார். காந்தி மாளிகை டிரஸ்டி சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி வரவேற்றார். பிள்ளார்செட்டியார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள். விழாவில் பச்சமுத்து உடையார், குமார், ராமமூர்த்தி, குபேர்தாஸ், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். முடிவில் வர்த்தக தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

அத்தனூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு சொக்கலிங்கமூர்த்தி தலைமை தாங்கினார். பேரூர் காங்கிரஸ் தலைவர் பூபதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கார்த்திகேயன், அர்த்தனாரி, பழனிவேல், ராஜா, செந்தில், ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்திய அரசு நேரு யுவகேந்திராவுடன் இணைந்த ராசிபுரம் கோல்டன் நற்பணி சங்கத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடந்தது. தலைவர் குபேர்தாஸ் தலைமை தாங்கினார். வக்கீல் பாச்சல் சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விப்ஜியார் அறக்கட்டளை தலைவர் வரதராஜன் இனிப்பு வழங்கினார். இதில் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழாவையொட்டி ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவரும், தற்போதைய நகர வங்கி தலைவருமான பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கினார்.

இதில் நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், கோவில் ஆய்வர் செல்வி, கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், ராசிபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து சாப்பிட்டனர்.

வெண்ணந்தூர் வட்டாரம் ஒ.சவுதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் திருச்சி கிரீன் ஷடோ பவுண்டேசன் சார்பில் பல்லுயிர் தன்மை குறித்த புகைப்பட விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி கிரீன் ஷடோ பவுண்டேசன் இயக்குனர் வினோத்குமார், ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார், பிரியங்கா ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினர். முடிவில் ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Next Story