ஆறுகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு: பவானியில் 750 வீடுகளில் தண்ணீர் புகுந்தது


ஆறுகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு: பவானியில் 750 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 18 Aug 2018 5:05 AM IST (Updated: 18 Aug 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

பவானி மற்றும் காவிரி ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பவானியில் 750 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் முகாம்களில் 2 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

பவானி,

கடந்த சில நாட்களாக காவிரி மற்றும் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பவானி மற்றும் காவிரி ஆறு கூடும் பகுதியான ஈரோடு மாவட்டம் பவானியில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 80 கனஅடி தண்ணீரும், பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 62 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன்காரணமாக பவானி பழைய பாலம் பகுதி, காவிரி வீதி, தேர் வீதி, தினசரி மார்க்கெட் வீதி, அரிசி மார்க்கெட் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பவானி பண்டார அப்புச்சி கோவில் அருகே தாமரைக்குளம் ஓடையில் ஆற்று வெள்ளம் திடீரென புகுந்தது. இதனால் அங்கு உள்ள சீனிவாசபுரம், பழனிபுரம், சோமசுந்தரபுரம், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் சிவகாமி, நகராட்சி ஆணையாளர் கதிர்வேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆற்று வெள்ளம் புகுந்துவிடாதபடி ஓடை பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பலர் தங்களுடைய வீடுகளில் இருந்த பொருட்களை பரிசல் மூலம் எடுத்து மேடான இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர்.

இதேபோல் பவானியை அடுத்து உள்ள ஜம்பை, எலவமலை, ஒரிச்சேரி ஆகிய பகுதிகளிலும் நேற்று பகல் 10 மணி அளவில் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் ஜம்பை, ஒரிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 150 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதில் ஜம்பை கழுங்கு பகுதியை சேர்ந்த லெனின் (வயது 63) என்பவரின் தோட்டத்து வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் லெனின், அவருடைய மனைவி செல்வமணி (52) ஆகியோர் வீட்டின் உள்ளே வசமாக சிக்கி கொண்டனர். உடனே அவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். ஆனால் அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

உடனே இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரிகள் பாஸ்கரன், ரமேஷ்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் எலவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மஞ்சள், கரும்பு, வாழை தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த ஒரு மீன் பண்ணைக்குள்ளும் ஆற்று தண்ணீர் புகுந்தது.

பவானி தாலுகா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அரசின் சார்பில் 17 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

இந்த முகாம்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறதா? மற்றும் கழிப்பறை வசதி, மின்சார வசதி ஆகியவை முறையாக செய்யப்பட்டு உள்ளதா? என கேட்டறிந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாபேட்டையில் ஆற்றின் கரையோரத்தில் இருந்த அங்காயி என்பவருடைய வீடு இடிந்து விழுந்துவிட்டது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, காட்டூர் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று சென்றனர். மருத்துவ அதிகாரி சண்முக சுந்தரம் தலைமையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Next Story