விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதே மத்தியஅரசின் நோக்கம் - மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சக செயலாளர்


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதே மத்தியஅரசின் நோக்கம் - மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சக செயலாளர்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:52 PM GMT (Updated: 17 Aug 2018 11:52 PM GMT)

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதே மத்தியஅரசின் நோக்கம் என மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சக செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனத்தில் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால முன்னேற்றம் குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கவிழா நேற்று நடந்தது. கருத்தரங்கை மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சக செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் காலத்தில் உணவு பதப்படுத்துதல் இல்லாமல் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்த முடியாது. மத்தியஅரசின் நோக்கமானது வருகிற 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்க வேண்டும் என்பது தான். அதை உணவு பதப்படுத்துதல் மூலமே சாத்தியமாக்க முடியும். வேளாண்மைத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் உணவுகளை பதப்படுத்துதல் செய்வதுடன், மதிப்புக்கூட்டு பொருட்களை செய்ய வேண்டும்.

உணவுத்துறையில் சிறு, குறு விவசாயிகள் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகின்றனர். எனவே உணவு பதப்படுத்துதல் என்பது மிகவும் அவசியமாகிறது. காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் நம் நாடு முன்னிலையில் இருக்கிறது. ஆனால் விளை பொருட்களில் 25 சதவீதம் மட்டுமே பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியான தொழில்நுட்பத்தை வழங்கி உணவு பதப்படுத்துதல் செய்தால் 2 மடங்கு வருவாய் கிடைக்கும்.

எனவே விளைபொருட்கள் பதப்படுத்துதலை அதிகப்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். மத்தியஅரசும் உணவு பதப்படுத்துதலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல மாநிலஅரசுகளும் உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. உணவு பதப்படுத்துதலை மேம்படுத்தினால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் உணவு பதப்படுத்துதல் தொடர்பாக 7 நிறுவனங்களுடன் இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. விழாவில் பரசுராமன் எம்.பி., மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சக பொருளாதார ஆலோசகர் பிஜயா குமார் பெஹ்ரா, இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கம் இன்றுடன்(சனிக்கிழமை) நிறைவடைகிறது.

Next Story