இந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர்


இந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர்
x

இந்த ஒரு போரில் மட்டும் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் தோற்று, கண்காணாத புது பிரதேசத்துக்கு பயணத்தைத் தொடங்கி விட்டார்.

இந்த ஒரு போரில் மட்டும் எவருமே வென்றதில்லை. எனவே இதற்கு வாஜ்பாயும் விதிவிலக்கு அல்லவே.

ஆனால் மற்றவர்களிடம் இருந்து அவரை அதிக அளவில் வித்தியாசப்படுத்துவது எதுவென்றால், அவர் மேற்கொண்ட ஏராளமான போராட்டங்களில் அவர் ‘அடல்’ ஆக இருந்தார். அதாவது அசைத்துப்பார்க்க முடியாதவராக திகழ்ந்தார்.

அடல் ஆக மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் ‘பிகாரி’ ஆகவும், அதாவது சமூகநலனுக்காக அலைந்து திரியும் நாடோடியாகவும் விளங்கினார். புதிய இந்தியாவைப் பற்றி அவர் கண்ட கனவை நிறைவேற்றுவதில் அதீத நம்பிக்கை கொண்டு இருந்தார்.

1960-ம் ஆண்டில் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பிற்காலத்தில், வாஜ்பாய், அத்வானி போன்ற பா.ஜ.க.வின் தலைவர்களுடன் நான் அமர்ந்திருப்பேன் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை. அறிமுகம் ஆன நாளில் இருந்தே வாஜ்பாயின் அன்பு, பாசம், வழிகாட்டுதல் ஆகியவற்றை பெற்றிருக்கிறேன்.

ஒருவரது அகத்தின் அழகு அவரது முகத்தில் தெரியும் என்று பொதுவாக சொல்வது வழக்கம். இதற்கு வாஜ்பாய் ஒரு நல்ல உதாரணம். அவரது எண்ணங்களில் உள்ள தெளிவு, நம்பிக்கையின் பலம், தேசத்தைப் பற்றிய தரிசனம் ஆகியவை அவரிடம் பிரதிபலித்தன. வாஜ்பாயிடம் இருந்து விலகாத புன்னகை என்பது அவரின் அகத்தில் இருந்த அழகு என்பது என் எண்ணம்.

2009-ம் ஆண்டு வரையில், அவர் தனது 65 ஆண்டு கால தீவிரமான பொது வாழ்க்கையில் 56 ஆண்டு காலத்தை எதிர்க்கட்சி வரிசையிலும், 9 ஆண்டு ஆளும் கட்சி வரிசையிலும் கழித்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக 10 முறையும், டெல்லி மேல்-சபை உறுப்பினராக இரண்டு முறையும் தேர்வாகி இருந்தார். மொரார்ஜிதேசாய் அரசில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய வாஜ்பாய், 3 முறை இந்திய பிரதமராக ஜொலித்தார்.

எதிர்க்கட்சி வரிசையிலோ அல்லது ஆளும் கட்சி வரிசையிலோ அமர்ந்தாலும், சுதந்திரம் கிடைத்ததில் இருந்து அவர் தேச வளர்ச்சிக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவும் தன்னை மிகவும் அர்ப்பணித்து செயல்பட்டார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர். அரசியலில் அவரது உரைகள், ஜவஹர்லால் நேரு உள்பட பல அரசியல் தலைவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

பிரதமராக இருந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த பெரும் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதில் திறம்பட செயல்பட்டார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது தீர்க்கமான பேச்சாளர் என்பதோடு மட்டும் அல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதில் உறுதியான தலைவர் என்பதையும் வாஜ்பாய் நிரூபித்திருக்கிறார்.

பிரதமராக இருந்தபோது மிக முக்கிய துறைகளான தொலைத்தொடர்பு, தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட உட்கட்டமைப்புகள், ஊரக சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொதுத்துறை பங்களிப்புகள், முதலீடு விவகாரங்கள் ஆகியவற்றின் வரையறைகளை திருத்தி எழுதினார். அதன் மூலம் அவர் தன்னை ஒரு தலை சிறந்த சீர்திருத்தவாதி என்பதை நிரூபித்தார். அதன் பலனை இந்த தேசம் இன்னும் அறுவடை செய்துகொண்டிருக்கிறது.

வாஜ்பாய் மென்மை குணமும், கடின குணமும் கலந்திருந்தவராக காணப்பட்டார். பொக்ரான், கார்கில் நிகழ்வுகள் அவரது ஆக்ரோஷத்தை காட்டின. அதே நேரத்தில் கூட்டணி ஆட்சியின் முக்கிய காலகட்டத்தில் அவர் அரசியல் தளத்தில் நடந்துகொண்ட விதம் அவரது மென்மையை வெளிப்படுத்தியது.

இதுபோன்ற தனித்துவத்துடன் விளங்கிய காரணத்தினால்தான், காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமராக இருந்து முழு ஆட்சியை ஒருமுறை அவரால் ஏற்படுத்த முடிந்தது. 23 கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சியை ஸ்திரமாகவும் வெற்றிகரமாகவும் நடத்திச்சென்று தன்னை ஒரு தகுதியுள்ள தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.

இந்திய அரசியலில் அவர் பல வழிகளில் பங்களித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காத்ததில் அவரது பங்களிப்பு அதிகமானது. ஒரு மிகச்சிறந்த நிர்வாகி வாஜ்பாய் என்பதை இந்திய வரலாறு சொல்லும்.

மக்கள் நம்பிக்கையின் உருவமாக விளங்கியதுதான், சுதந்திர இந்தியாவின் தலை சிறந்த தலைவர்களுள் ஒருவராக வாஜ்பாயை மாற்றியது. அவர் தன்னை அனைத்து தரப்பு மக்களுக்கும் வெளிப்படுத்தினார். அவர் ஒரு உண்மையான இந்தியனாக இருந்தார் என்பதோடு, இருந்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

உண்மையான தேசியவாதத்தை என்னைப் போன்ற லட்சக்கணக்கானோர் பின்பற்றுவதற்கு அவர் அளித்த ஊக்கமும் ஒரு காரணம். இந்த தேசத்தின் அடையாளம் வாஜ்பாய். எந்தவொரு எதிரியும் இல்லாத உண்மையான அஜாத சத்ரூ அவர்.

அவரை நோய் வந்து தாக்கும் வரை, இளம் இதயம் கொண்ட தலைவராக திகழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது புன்னகை என்றுமே அவருடன் இருந்தது. அவரது ஆளுமை, பேச்சாற்றல், கடமைக்கான அர்ப்பணிப்பு, நட்பு ஆகியவை கலந்த அவரது தலைமைத்துவம், இன்னும் நீண்ட காலம் நினைவிலேயே நிற்கும்.

சொல்லாலும், செயலாலும் இந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர், வாஜ்பாய். இவர் போன்ற தலைவர், எப்போதாவதுதான் கிடைப்பார்.

- வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி

Next Story