கோவில்பட்டி அருகே திருமணமான 7 மாதத்தில் நர்ஸ் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
கோவில்பட்டி அருகே திருமணமான 7 மாதத்தில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே திருமணமான 7 மாதத்தில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் மனு அளித்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுடைய மகன் மாரிமுத்து (வயது 27). இவர் துபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கோவில்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் மாரீசுவரி (23). இவர் நர்சிங் படித்து விட்டு, கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார்.
மாரிமுத்துவுக்கும், மாரீசுவரிக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் மாரீசுவரி தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்தவாறு, தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்று வந்தார். மாரிமுத்து துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
தற்கொலைஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாரீசுவரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த மாரீசுவரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் மர்மம் இருப்பதாக புகார்இதற்கிடையே மாரீசுவரியின் பெற்றோர், நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தங்களுடைய மகள் மாரீசுவரியின் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் மன தைரியமான பெண். மாரீசுவரி தற்கொலை செய்ததாக பக்கத்து வீட்டினர்தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
நாங்கள் சென்று பார்த்தபோது, மாரீசுவரியை தரையில் கிடத்தி துணியால் மூடி வைத்து இருந்தனர். எனவே மாரீசுவரி எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதவி கலெக்டர் விசாரணைபிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே மாரீசுவரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருமணமான 7 மாதத்தில் நர்ஸ் தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் (பொறுப்பு) சங்கர நாராயணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.