பலத்த மழையால் சாலையில் மண் சரிவு: தமிழக–கேரள எல்லையில் 4–வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
பலத்த மழையால் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக– கேரள எல்லையில் 4–வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை,
பலத்த மழையால் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக– கேரள எல்லையில் 4–வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இருமாநில பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.
சாலையில் மண் சரிவுகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13 நாட்களாக பலத்த மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் ஆரியங்காவு தொடங்கி, தென்மலை வரையுள்ள பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்களும் சாய்ந்தன. மேலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தன. இதையடுத்து கொல்லம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த சாலையை தற்காலிகமாக மூட நெல்லை மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி கடந்த 15–ந் தேதி மாலை முதல் தமிழக, கேரள எல்லைப்பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரள மாநிலத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து வாகனங்களில் கேரளா செல்லும் பயணிகள் புளியரையிலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கோட்டைவாசலிலும் இறங்கி 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் அவதிமேலும் தென்மலை அருகே ரெயில்வே குகை பாதையில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மற்றும் மண் சரிவுகளை அகற்றும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இதனால் தமிழக– கேரளா இடையே நேற்று 4–வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் இரு மாநில பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 1992–ம் ஆண்டு உருவான மழை வெள்ள சேதத்துக்கு பின்னர் தற்போது தான் இந்த பாதை மண் சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.