தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5–வது நாளாக தடை நம்பியாறு அணை நிரம்பியது


தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5–வது நாளாக தடை நம்பியாறு அணை நிரம்பியது
x
தினத்தந்தி 19 Aug 2018 3:30 AM IST (Updated: 19 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கு தொடர்வதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 5–வது நாளாக தடை விதிக்கப்பட்டது. நம்பியாறு அணையும் நிரம்பியது.

நெல்லை, 

வெள்ளப்பெருக்கு தொடர்வதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 5–வது நாளாக தடை விதிக்கப்பட்டது. நம்பியாறு அணையும் நிரம்பியது.

தொடர் மழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றாலம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு நேற்று 5–வது நாளாக நீடித்தது. காலையில் இருந்து குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5–வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

இதனால் புலியருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.

அணைகள்

மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாபநாசம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இந்த அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 664 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 1,020 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையில் 4 ஆயிரத்து 758 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து அப்படியே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டு உளளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்து சீராக ஓடுகிறது.

நம்பியாறு நிரம்பியது

நம்பியாறு அணைக்கும், வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. அதனால் அந்த அணைகள் நிரம்பாமல் இருந்தன. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அணைக்கு தண்ணீர் வேகமாக வரத்தொடங்கியது. அணையின் மொத்த கொள்ளளவு 23.60 அடியாகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி 20.60 அடியாக நீர்மட்டம் இருந்தது. 20.60 அடி எட்டியதே அணை நிரம்பியதாக கருதப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடக்கு பச்சையாறு அணைக்கு வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 49.20 அடியாகும். தற்போது 35.41 அடி தண்ணீர் இருக்கிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டர்) வருமாறு:–

பாபநாசம்–4, சேர்வலாறு– 2, கடனா– 6, ராமநதி– 1, கருப்பாநதி– 1.5, குண்டாறு– 28, அடவிநயினார்– 45, ராதாபுரம்– 3, செங்கோட்டை– 19, சிவகிரி– 3, தென்காசி– 2.


Next Story