சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு; மானூர் பெரியகுளம் நிரம்பவில்லை விவசாயிகள் வேதனை
சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் மானூர் பெரியகுளம் நிரம்பவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மானூர்,
சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் மானூர் பெரியகுளம் நிரம்பவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீராதாரம் முடங்கியதுமானூர் பெரியகுளம் நெல்லை மாவட்டத்தின் 2–வது பெரியகுளமாகும். 1,120 ஏக்கர் பரப்பளவும், 190 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, ராமநதி அணை மற்றும் குண்டாறு அணை போன்ற அணைகளை விட அதிக கொள்ளளவு கொண்டது.
சிற்றாறு அதன் கிளை நதிகளான அனுமன் நதி, கருப்பாநதி ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீராதாரத்தை கருத்தில் கொண்டே மானூர் தடுப்பணை வீ.கே.புதூர் அருகே சிற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. ஆனால் அனுமன்நதியில் அடவிநயினார் அணையும், கருப்பாநதியில் கருப்பாநதி அணையும் கட்டப்பட்ட பின்பு மானூர் குளத்துக்கு தண்ணீர் தரும் மானூர் கால்வாயின் நீராதாரம் முற்றிலும் முடங்கிப் போனது.
நிரந்தரமாக வறட்சிஇதன்பின்பு மானூர் கால்வாயின் கடைசிக்குளமான மானூர் பெரியகுளம் நிரம்புவது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. மானூர் கால்வாயில் மானூர் பெரியகுளத்துக்கு முன்பாக உள்ள 19 குளங்களும் நிரம்பிய பின்னர்தான் மானூர் குளத்துக்கு தண்ணீர் வரும். அதற்கு உள்ளாகவே மழைக் காலமும் முடிந்து போய்விடும். எனவே மானூர் குளம் நிரந்தரமாக வறட்சியையே சந்தித்து வருகிறது.
மேலும் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை குறிப்பன்குளம் என்ற ஊரில் இருந்து மானூர் தடுப்பணை வரை உள்ள சுமார் 8 கிலோமீட்டர் தூரம் கால்வாயை விவசாயிகள் ஆக்கிரமித்து தங்கள் வயலோடு சேர்த்து பயிர் செய்து வருகிறார்கள். அப்பகுதியில் கால்வாயில் கரையே இல்லாததால் தங்கள் நிலத்துக்குள் தண்ணீர் வந்து பயிர் சேதம் ஏற்படுவதாக கூறி அப்பகுதி விவசாயிகள் கால்வாயில் வரும் தண்ணீரை திரும்பவும் ஆற்றிற்கே திருப்பி விடுகிறார்கள்.
விவசாயிகள் முயற்சி3 வருடத்துக்கு முன்பு அரசு நிதியில் ரூ.2.20 கோடி செலவில் கால்வாய் தூர்வாரப்பட்டது. அப்போது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தங்களது ஆக்கிரமிப்புக்கு பாதுகாப்பு அரணாக பனை மற்றும் தென்னை மரங்களை நட்டு வைத்திருப்பதை கண்டு மானூர் பகுதி விவசாயிகள் கால்வாயில் நீர்வரத்துக்கு இடையூறாக இருக்கும் பனை மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தனர். கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் நிலைமையை உணர்ந்து பனை மரங்களை அகற்ற சம்மதித்தனர். ஆனால் வருவாய்த்துறை ஊழியர்கள் பச்சை மரங்களை வெட்டக்கூடாது என தடுத்துவிட்டனர்.
தற்போது நமது மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பசுமை மரங்களை வெட்டி சாய்த்துவிட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு நீராதார கால்வாயில் நீரோட்டத்துக்கு இடையூறாக இருக்கும் பனை மரங்களை ஏன் வெட்டக்கூடாது என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்தற்போது நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து பெரும்பாலான அணைகள் நிரம்பி சிற்றாற்றிலும், தாமிரபரணி நதியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், சிற்றாறு வடிநில பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டும், மானூர் பெரியகுளத்துக்கு இதுவரை தண்ணீர் வராமல் வறண்டு கிடக்கிறது. அரசு அதிகாரிகள் முழுமனதுடன் மானூர் பெரியகுளம் கால்வாயை சர்வே செய்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் மரங்களை அகற்றி தடுப்புச்சுவர் கட்டி மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாதவாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வரும்.
வருடந்தோறும் பருவமழைக்கு முன்பு கால்வாயை ஆய்வு செய்து அங்குள்ள முள்மரங்களை அகற்றி, மடை ஷட்டர்களை பழுது பார்க்க வேண்டும். சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் மானூர் பெரியகுளம் நிரம்புவதில்லை. எனவே மானூர் பெரியகுளம் நிரம்பி எப்போது விடிவுகாலம் பிறக்கும் என விவசாயிகள் ஏக்கத்துடனும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.