காட்பாடியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் விடுவிப்பு


காட்பாடியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் விடுவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவரை கடத்தல்காரர்களே விட்டுச்சென்றனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

வேலூர்,

காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். லாரி நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மகன் டிஜோ ரமேஷ் (வயது22). கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் கடந்த 16-ந் தேதி இரவு கடைக்கு சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது.

அவரை கடத்திய கும்பல் ரமேசுக்கு போன் செய்து டிஜோ ரமேசை கடத்திவைத்திருப்பதாகவும், ரூ.1 கோடி கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், தனது மகன் டிஜோ ரமேஷ் போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது.

உடனடியாக இதுபற்றி விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து சாலைகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் நேற்றுமுன்தினம் காலையில் கடத்தல் கும்பல் பயன்படுத்திய செல்போன் கொணவட்டம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தியபோது காட்பாடி பகுதியிலும், பின்னர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியிலும் அந்த செல்போன் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சித்தூர் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கடத்தப்பட்ட டிஜோ ரமேசை, கடத்தல் கும்பல் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கூறியதாவது:-

டிஜோ ரமேசை கடத்திய கும்பல் ரூ.1 கோடி கேட்டுள்ளது. கடத்தப்பட்ட டிஜோரமேசை காட்பாடி பகுதியில் உள்ள மலையில், கண்களை கட்டி வைத்துள்ளனர். போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரமடைந்ததால் அவர்கள் வெளியே செல்லமுடியாமல் நேற்று முன்தினம் இரவு இருசக்கரவாகனத்தில் கண்களை கட்டியபடியே அழைத்துவந்து கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அவரை விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து டிஜோரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த கடத்தல் சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் காட்பாடி வைபவ் நகரை சேர்ந்த திலீப்குமார் (30), வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த சரவணன் (37) ஆகியோரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான விருதம்பட்டு ஆர்.கே.நகரை சேர்ந்த மன்சூர் மற்றும் 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story