வால்பாறையில் கனமழை: தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் விரிசல்


வால்பாறையில் கனமழை: தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் விரிசல்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தொடரும் கனமழை காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் ஊற்று ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

வால்பாறை,

வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கனமழை பெய்தது.இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்த போது தங்களது வீட்டிற்குள்ளும் வீட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டுக்கு முன்புறமும் பூமியில் பெரியஅளவில் நீண்ட தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இதே நிலைதான் அருகிலிருந்த 6 வீடுகளிலும் அவர்களது வீடுகளுக்கு முன்னாலும் நீண்ட தூரத்திற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போல நீண்ட விரிசல் ஏற்பட்டிருந்துள்ளது.

இதே போல நேற்று மாலை வால்பாறை அருகே உள்ள சோலையார்எஸ்டேட் முதல்பிரிவு குருவம்பாடி தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள தேயிலைத் தோட்ட பகுதியில் பெரியளவிலான விரிசல் பூமியில் ஏற்பட்டு அந்த விரிசலில் இருந்து தண்ணீர் ஊற்று தோன்றி அருகில் உள்ள குடியிருப்பு வழியாக பாய்ந்து சென்றது. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்து சோலையார்எஸ்டேட் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு அந்த பகுதியை சேர்ந்த மக்களை எஸ்டேட் கொடுத்த மாற்று வீடுகளுக்கு செல்ல வைத்தனர். அப்போது அவர்கள் வயதானவர்களை தூக்கிக் கொண்டு சென்று உதவினர். இதனை தொடர்ந்து, சோலையார்எஸ்டேட்டிற்கு சென்ற, அ.தி.மு.க. தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது, மற்றும் மயில்கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் எஸ்டேட் நிர்வாகத்திடம் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story