ஊட்டியில் பட்டப்பகலில் நடுரோட்டில் நின்ற ஆட்டுக்குட்டியை கவ்வி சென்ற நாய்கள், கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ஊட்டியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் நின்ற ஆட்டுக்குட்டியை நாய்கள் கவ்வி சென்றன. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நள்ளிரவில் ஊட்டி காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் 10–க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சேர்ந்து இரண்டு ஆடுகளை கடித்துக்கொன்று அட்டகாசம் செய்தது. இதற்கிடையே தற்போது மீண்டும் அதே பகுதியில் நேற்று பகலில் நடுரோட்டில் நின்று கொண்டு இருந்த ஆட்டுக்குட்டியை இரண்டு நாய்கள் கவ்வி சென்றது. பின்னர் அந்த நாய்கள் புதருக்கு சென்று ஆட்டுக்குட்டியை கடித்து குதறி தின்றது. இதில் ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
ஊட்டி காபிஹவுஸ் ரவுண்டானா, சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பிங்கர்போஸ்ட், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று ஆட்டுக்குட்டியை கவ்வி சென்ற நாய்களை விரட்டும் சென்ற மக்கள் மீது பாய்கிறது. இந்த நாய்களுக்கு வெறி பிடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த சம்பவம் அதே பகுதியில் நடந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் நாய்கள் அட்டகாசம் அதிகரித்தது. அப்போது இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா உத்தரவின் பேரில், ஊட்டி நகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நாய் பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, நாய்கள் இனப்பெருக்க செய்ய முடியாமல் கருத்தடை செய்ய மற்றும் வெறி பிடிக்காமல் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நகராட்சி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகி விட்டது.
ஊட்டி நகரில் தொடர் மழை காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் பள்ளி மாணவ–மாணவிகள் டியூசன்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாய்கள் விரட்டி துரத்துகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விட்டு பல மணி நேரம் காத்திருந்து குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டிய நிலைமை பெற்றோர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, ஊட்டி நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்கவும், வெறிநாய்களை கண்டறிந்து கொல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.