ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை கிடப்பில் போட்டது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி


ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை கிடப்பில் போட்டது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி
x
தினத்தந்தி 18 Aug 2018 10:30 PM GMT (Updated: 18 Aug 2018 7:58 PM GMT)

கரூர் அருகே ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை பயன்பாடின்றி கிடப்பில் போட்டது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி, அதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

கரூர்,

சுடுகாட்டில் மரக்கட்டை, பசுஞ்சாண எருவு உள்ளிட்டவற்றின் மூலம் தீமூட்டி இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறையே முன்பு பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உடல் வரும்போது தகனம் செய்ய தாமதம் ஏற்படுவது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டதாலும் தமிழகத்தில் மின்சாரம் மூலம் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் மின் எரிமேடை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் பயன் பாட்டுக்கு வந்தது. அதில் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே தகனம் செய்வது என்பன உள்ளிட்ட அரசு விதிகள் கடைபிடிக்கப்படுவதால் உடலை மாற்றி தகனம் செய்தல் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன. இறுதியாக தகனம் செய்யப்பட்டவரின் சாம்பல் அவரது உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

அந்த வகையில் கரூர் அருகே பசுபதிபாளையம் வடக்குதெருவின் ஒதுக்குப்புறமாக அமராவதி ஆற்றங்கரை அருகே கடந்த 2007-ம் ஆண்டில் கரூர் நகராட்சி பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்தது. அப்போது மின்உலை, மின்னூட்ட தகடு உள்ளிட்டவை வைக்கப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. தண்ணீர் வசதிக்காக அங்கு கிணறு தோண்டப்பட்டு மின்மோட்டார் மூலம் தண்ணீர் சேமிக்கப்பட்டது. மேலும் இறந்தவர் உடலை தகனம் செய்ய வருபவர்கள் குளிப்பதற்காக குளியலறை வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தவுடனேயே எந்திரங்களில் ஏற்பட்ட பழுதினால் இந்த தகனமேடையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த எரிவாயு தகனமேடையானது சிதிலமடைந்து தான் இருக்கிறது. இரும்பு வாயிற் கதவுகள் கழற்றப்பட்டு உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. உடல் தகனம் செய்யும் கட்டிடத்தின் உள்புற பகுதியில் சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து போய் இருக்கிறது. மேலும் தூசு படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் இறந்தவர் உடலை தூக்கி செல்லும் தள்ளுவண்டி துருப்பிடித்து விட்டது. குளியலறை கதவுகள் உடைந்து கிடக்கின்றன. இதற்கிடையே அங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும், கஞ்சா புகைப்பதற்கும் மற்றும் சில சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நவீன தகனமேடை பயன்பாட்டில் இல்லாத போதும், அதிலுள்ள பொருட்களை திருடி செல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் அருகே பாலம்மாள்புரத்தில் புதிதாக நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டதால், கரூரில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அங்கு தான் செல்கின்றனர். மேலும் பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, ராமாகவுண்டனூர், கொளந்தானூர் உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு இறந்தவர் உடலை தகனம் செய்ய பாலம்மாள்புரத்திற்கு செல்வதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

தற்போது பசுபதிபாளையத்தில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெருக்கடியில் இறந்தவர் உடலை கொண்டு செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும் நீண்ட நாட்களாகியும் பசுபதிபாளையம் எரிவாயு தகனமேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் கிடப்பில் போடப்பட்ட பின்னணி என்ன?, கான்டிராக்ட் எடுத்தவர்களின் நலனுக்காகவா இந்த பணியை மேற்கொண்டனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே ரூ.50 லட்சத்தில் தகனமேடை அமைத்ததில் ஊழல் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிதிலமடைந்த அந்த கட்டிடம், மின்உலை உள்ளிட்டவற்றை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story