கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன. அங்கு வசித்து வந்த பொதுமக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

கொள்ளிடம்,

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை அதிகாரிகள் இரவு, பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெள்ளமணல், அளக்குடி, முதலைமேடு திட்டு, வாடி, நாதல்படுகை ஆகிய கிராமங்களுக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன.

கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து அந்த கிராமங்களில் வசித்து வந்த 700 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 10 பைபர் படகுகள் மூலம் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

கிராம மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆறு கரை புரண்டோடுவதால் கொள்ளிடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் வட்டார வளர்ச்சி அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது 3 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர வாய்ப்பு உள்ளது. வெள்ளம் புகுந்த கிராமங்களை சேர்ந்த 1,115 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கீழவாடி, பாலுரான்படுகை, கொன்னகாட்டுப் படுகை, துளசேந்திரபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாரதி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், ஒன்றிய ஆணையர் அன்பரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்ததால் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி செடிகளும், குறுவை நெல் பயிரும் மூழ்கி விட்டன. வயல் வெளியில் இருந்த மின்மோட்டார்கள், ஆயில் என்ஜின்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கிராமங்கள் முற்றிலும் மூழ்கி விடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, கருப்பூர் ஆகிய கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, முருங்கை, சவுக்கு தோப்புகளிலும் வெள்ள நீர் புகுந்தது. அதேபோல 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கூடலூர் காளியம்மன் கோவிலையும் வெள்ள நீர் சூழ்ந்தது.

வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு பணிகளில் கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பாபநாசம் தாசில்தார்(பொறுப்பு) பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே கொள்ளிடம் கரையில் உள்ள சித்தமல்லி செட்டியார் தோப்பு பகுதியில் 12 குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன், பாதிக்கப்பட்டவர்களை சித்தமல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு அனுப்பி வைத்தார். இதேபோல் திருச்சிற்றம்பலம், சீபுலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள 8 குடும்பத்தை சேர்ந்தவர்கள், முடிகண்டநல்லூரை சேர்ந்த 11 குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 72 பேரை தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சீபுலியூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தங்க ஏற்பாடு செய்தனர். கொள்ளிடக்கரை பனங்காட்டாங்குடி முதல் குமாரமங்கலம் வரை 18 இடங்களில் தண்ணீர் புகும் இடங்களாக கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு சவுக்குக்கட்டைகள், மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Next Story