காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் மன்னார்குடியில், ஒரு குளத்தில் கூட தண்ணீர் நிரம்பாத அவலம்


காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் மன்னார்குடியில், ஒரு குளத்தில் கூட தண்ணீர் நிரம்பாத அவலம்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில், 97 குளங்கள் இருந்த நிலையில், தற்போது 47 குளங்கள் மட்டுமே உள்ளன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த போதிலும் மன்னார்குடியில் உள்ள எந்த குளத்திற்கும் இதுவரை தண்ணீர் நிரம்பவில்லை. அனைத்து குளங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தரக்கோட்டை,

கர்நாடகாவில் பெருமழை பெய்து அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு காவிரியில் வெள்ளம் கரை புரண்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் பெரும்பகுதி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் பெரும்பான்மையான ஏரிகள், குளங்களுக்கு இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏற்கனவே 97 குளங்கள் இருந்தன. இவற்றில் தற்போது 47 குளங்கள் மட்டுமே உள்ளது. எந்த குளத்திலும் இதுவரை தண்ணீர் நிரப்பப்படவில்லை. குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் வாய்க்கால்கள் ஆங்காங்கே தூர்வாரப்பட்ட போதிலும் இதுவரை குளங் களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

ஆறுகளில் தண்ணீர் அதிக அளவில் வரும் இந்த சூழ்நிலையில், மன்னார்குடியில் உள்ள குளங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் கிடப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

எனவே மன்னார்குடியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும். தற்போது அனைத்து குளங்களும் நிரம்பினால் வரும் கோடை காலத்தில் மன்னார்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.

எனவே அனைத்து குளங்களையும் விரைந்து நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story