பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறையினர் மறுப்பு கொள்ளிடம் ஆற்றில் சேதமான நீரேற்று பாலத்தை சீரமைப்பதில் சிக்கல்


பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறையினர் மறுப்பு கொள்ளிடம் ஆற்றில் சேதமான நீரேற்று பாலத்தை சீரமைப்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சேதமான நீரேற்று நிலைய பாலத்தை சீரமைப்பதற்கு பாதுகாப்பு கருதி தீயணைப்பு துறையினர் மறுத்து விட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதி கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு வடிகால் வாரியத்தால் திருவெறும்பூர் கூட்டுகுடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு, நீரேற்று நிலையத்தில் உள்ள முதல் தூண் 3 அடிவரை கீழே இறங்கி சேதமாகி விட்டது. நீரேற்று நிலையத்தில் இருந்து 15 அடி நீளத்துக்கு உள்ள பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்குகிறது.

மின்மோட்டார் இயக்கப்பட்டால் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்படும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக மேலும் பாலம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் கடந்த 4 நாட்களாக மின்மோட்டாரும் இயக்கப்பட வில்லை. இதனால், இந்த குடிநீரேற்று நிலையம் மூலம் பயன்பெறும் 80 ஊரக குடியிருப்புகள் மற்றும் 18 இதர பயனாளிகளுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடினாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எனவே, பஞ்சக்கரை கொள்ளிடம் ஆற்றில் சேதமான கூட்டுகுடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் சேதமான தூண் பகுதியில் ராட்சத இரும்பு ராடுகளை பொருத்தி, அதன்மேல் இரும்பு பிளேட்டுகளை பொருத்தி சீரமைக்கும் பணிக்காக குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தங்க மாரியப்பன் தலைமையில் ஒப்பந்த பராமரிப்பு பணி அதிகாரியான அன்புக்கரசன் மற்றும் பணியாளர்கள் வந்தனர். அதற்காக தலா 600 கிலோ எடைகொண்ட 4 இரும்பு ராடுகள், 10-க்கும் மேற்பட்ட இரும்பு பிளேட்டுகள் அங்கு கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு பணிக்காக திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் லியோஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், ஆற்றில் மிதவை படகை நிறுத்த முடியாது. மேலும் போதிய பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்பதால், வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னரே சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியும் என நிலைய அலுவலர் லியோ ஜோசப், ஒப்பந்த பராமரிப்பு அலுவலரிடம் தெரிவித்தார். இதனால் சீரமைப்பு பணிக்காக வந்த பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக பராமரிப்பு பணி அதிகாரி அன்புக்கரசன் கூறுகையில்,‘திருவெறும்பூர் கூட்டுகுடி நீர் திட்டத்தின்கீழ் பயன் பெறும் கிராமங்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிக்காக வந்தோம். ஆனால், கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி அதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். தற்போது குடிநீர் வினியோகம் பெறும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

Next Story