தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடந்த அமைதி ஊர்வலத்தில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
தர்மபுரி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் தர்மபுரி 4 ரோட்டில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கி வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்லபாண்டியன், சிவன், அழகு, மாவட்ட துணைத்தலைவர் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ரமேஷ்வர்மா உள்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தர்மபுரியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தர்மபுரி 4 ரோடு பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சந்திரசேகர், ரெங்கதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தொலைபேசி நிலையம் முன்பு முடிவடைந்தது. அங்கு வாஜ்பாய் உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாவட்டசெயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் கணேசன், வர்த்தகர் அணி நிர்வாகி சரவணன், இளைஞரணி நிர்வாகி சோபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி அனைத்து வணிகர் சங்கம் சார்பில் தர்மபுரி காமராஜர் சிலை முன்பு வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர வணிகர் சங்க தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆண்டாள் ரவி, நகர துணை செயலாளர்கள் சாதிக்பாட்சா, பாலு, நகர துணைத்தலைவர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மண்டல தலைவர் வைத்திலிங்கம் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் டி.ஜி.மணி, சக்திவேல், அம்மன்பழனி, கருணாநிதி உள்பட வணிகர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ம.தி.மு.க. மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பிலும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாஜ்பாய் மறைவையொட்டி பா.ஜ.க. சார்பில் பாலக்கோட்டில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முரளி, நகர செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாலக்கோடு நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாலக்கோடு வணிகர் சங்கத்தினர் தக்காளி மண்டி அருகில் இருந்து ஊர்வலமாக வந்து வாஜ்பாய் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நல்லம்பள்ளி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ரங்கநாதன், ராமலிங்கம், அன்பு, வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் மானியதஅள்ளி, அதியமான்கோட்டை, பாகலஅள்ளி, தடங்கம் உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரூர் அருகே உள்ள தீர்த்தமலையில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன் தலைமையில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வேலாயுதம், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குமார், ஏழுமலை ராஜதுரை, சிவா, அருள்மொழி, பெருமாள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.