வீராம்பட்டினம் திருவிழாவுக்கு வந்த போது நண்பர்களுடன் கடலில் குளித்த வாலிபர் அலையில் சிக்கி பலி
வீராம்பட்டினம் திருவிழாவைகாண நண்பர்களுடன் வந்த வாலிபர் ஒருவர் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
அரியாங்குப்பம்,
வில்லியனூர் கணுவாப்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் தொழிலாளி. இவரது மகன் சூர்யா(வயது20).அச்சக ஊழியர். நேற்று முன்தினம் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதனை பார்ப்பதற்காக சூர்யா தனது நண்பர்கள் சிலருடன் அங்கு வந்தார்.
தேர் திருவிழாவை பார்த்து விட்டு பின்னர் சூர்யா தணது நண்பர்களுடன் வீராம்பட்டினம் கடலில் துறைமுகபகுதியில் ஆடிப்பாடி உல்லாசமாக குளித்து மகிழ்ந்தார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சூர்யா சிக்கி தத்தளித்தார்.அதற்குள் அடுத்தடுத்த வந்த அலைகள்அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் அலறினர்.உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி மயங்கிய நிலையில் இருந்த சூர்யாவை மீட்டனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே சூரியா பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்–இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.