மதுரை அருகே வீட்டு முன்பு நின்ற கல்லூரி மாணவி கத்தி முனையில் கடத்தல்


மதுரை அருகே வீட்டு முன்பு நின்ற கல்லூரி மாணவி கத்தி முனையில் கடத்தல்
x
தினத்தந்தி 19 Aug 2018 5:21 AM IST (Updated: 19 Aug 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு முன்பு நின்றிருந்த கல்லூரி மாணவியை கத்திமுனையில் ஆட்டோவில் கடத்திச்சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை பில்லர்சாலை பாரதியார் நகர் 8–வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் ஜெயபாரதி (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரில் பி.பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, ஜெயபாரதி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரை செல்லூரை சேர்ந்த அஜித்குமார் (24) உள்ளிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், மாணவி ஜெயபாரதியை ஆட்டோவில் கடத்த முயன்றனர். சுதாரித்து கொண்ட அவர் சத்தம் போட்டுள்ளார்.

அவரது அலறல் கேட்டு ஓடி வந்த தாயார் செல்வி, கடத்தல்காரர்களிடம் இருந்து தன் மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, அருகில் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். அதன்பின்னர் அந்த கும்பல் ஜெயபாரதியை ஆட்டோவில் கடத்தி விட்டு தப்பிச் சென்றது.

இதனால், செய்வதறியாது திகைத்த செல்வி, நடந்த சம்பவம் குறித்து அவரது கணவர் கணேசனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கணேசன் தனது மோட்டார் சைக்கிள் மூலம் ஆட்டோ சென்ற பாதையில் விரைந்து சென்றார். துவரிமான் சாலையில் வந்தபோது, ஜெயபாரதியை கடத்தி சென்ற ஆட்டோவை பார்த்துள்ளார்.

உடனடியாக தனது மகளை காப்பாற்ற முயன்றபோது, ஆட்டோவில் இருந்த கும்பல் ஆட்டோவை வைத்து அவர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த கணேசன், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

இதுகுறித்து ஜெயபாரதியின் தாயார் செல்வி, நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அஜித்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களையும், கல்லூரி மாணவி ஜெயபாரதியையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story