திருச்சிற்றம்பலத்தில் பயங்கரம்: தீ விபத்தில் ஓட்டல்–பர்னிச்சர் கடை உள்பட 7 கடைகள் எரிந்து நாசம்


திருச்சிற்றம்பலத்தில் பயங்கரம்: தீ விபத்தில் ஓட்டல்–பர்னிச்சர் கடை உள்பட 7 கடைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் ஓட்டல்–பர்னிச்சர் கடை உள்பட 7 கடைகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.1 கோடி மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன.

திருச்சிற்றம்பலம்,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை சேந்தவர் மணிகண்டன். இவர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். திருச்சிற்றம்பலம்–அறந்தாங்கி சாலையில் உள்ள இந்த ஓட்டல் அருகே திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது.

இதே பகுதியில் திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிள் ஒர்க்ஷாப், பெட்டிக்கடை, பொக்கன்விடுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடை, புனல்வாசலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மர பர்னிச்சர் கடை, மதுக்கூரை சேர்ந்த மாரிமுத்து என்பருக்கு சொந்தமான மர இழைப்பகம் உள்ளது.


நேற்றுமுன்தினம் இரவு 1 மணி அளவில் மணிகண்டனுக்கு சொந்தமான ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஓட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகே இருந்த டீக்கடை, ஒர்க்ஷாப், பெட்டிக்கடை, காய்கறி கடை, மர பர்னிச்சர் கடை, மர இழைப்பகம் ஆகியவற்றுக்கும் பரவியது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.


இந்த தீ விபத்தில் மர இழைப்பகத்தில் இருந்த எந்திரங்கள், விலை உயர்ந்த மரக்கட்டைகள், ரூ.1 லட்சம் பணம், பர்னிச்சர் கடையில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள், பெட்டிக்கடையில் இருந்த பிரிட்ஜ், ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

முன்னதாக ஓட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியபோது அப்பகுதியில் இருந்த சில தென்னை மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. தீப்பிளம்புகள் பறந்து சென்று விழுந்ததில் அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்படத்தின் முகப்பு பகுதியில் இருந்த கூரையில் தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீயில் எரிந்து உருக்குலைந்தது.


திருச்சிற்றம்பலத்தில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த பயங்கர தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மொத்தம் ரூ.1 கோடி மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

தீ விபத்து ஏற்பட்டவுடன் திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக களப்பணியாளர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சேதம் அடைந்த பகுதிகளை பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார், வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மர இழைப்பக உரிமையாளர் மாரிமுத்து கூறியதாவது:– அனைத்து உடைமைகளையும் தீ விபத்தில் இழந்து விட்டேன். எதிர்காலத்தில் பிழைப்புக்கு வழியில்லமால் போய்விட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வங்கி மூலம் கடன் உதவி வழங்க தஞ்சை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story