குடகு மழை வெள்ளத்தின் நிலைமை குறித்து குமாரசாமியிடம் ஜனாதிபதி விவரங்களை கேட்டு அறிந்தார்


குடகு மழை வெள்ளத்தின் நிலைமை குறித்து குமாரசாமியிடம் ஜனாதிபதி விவரங்களை கேட்டு அறிந்தார்
x
தினத்தந்தி 20 Aug 2018 5:00 AM IST (Updated: 19 Aug 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

குடகு மழை வெள்ளத்தின் நிலைமை குறித்து முதல்–மந்திரி குமாரசாமியிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விவரங்களை கேட்டு அறிந்தார்.

பெங்களூரு, 

குடகு மழை வெள்ளத்தின் நிலைமை குறித்து முதல்–மந்திரி குமாரசாமியிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விவரங்களை கேட்டு அறிந்தார்.

3,500 பேர் மீட்பு

குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத வகையில் பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ளத்தில் குடகு மிதக்கிறது. பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவு காரணமாக பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. மொத்தத்தில் குடகு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கிப்போய் உள்ளது.

நேற்று முன்தினம் முதல்–மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டரில் பறந்தபடி வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களில் 3,500 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயற்கை பேரிடர் மீட்பு குழுக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி கேட்டு அறிந்தார்

இந்த நிலையில் குமாரசாமி நேற்று 2–வது நாளாக குடகு மாவட்டத்தில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பறந்து வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்–மந்திரி குமாரசாமியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை சேதங்கள், மக்களின் பாதுகாப்பு, அரசு செய்து வரும் மீட்பு பணிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.

அதற்கு குமாரசாமி, குடகு மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பான முறையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், நமது ராணுவ வீரர்கள், இயற்கை பேரிடர் மீட்பு குழுக்கள் சிறப்பான முறையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

மக்களின் நிலை குறித்து...

மேலும் இதுவரை 3,500–க்கும் அதிகமான வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து வருவதாகவும் கூறினார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் நிலை குறித்து கேட்டு அறிந்ததற்காக நன்றி தெரிவிப்பதாகவும் குமாரசாமி கூறினார்.


Related Tags :
Next Story