குடகில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் மீட்பு வெள்ளம் பாதித்த பகுதிகளை குமாரசாமி 2–வது நாளாக ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்
குடகில் வெள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் பேர் நேற்று மீட்கப்பட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை 2–வது நாளாக குமாரசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
குடகு,
குடகில் வெள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் பேர் நேற்று மீட்கப்பட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை 2–வது நாளாக குமாரசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
குடகில் கனமழைகர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி வருகிறது. அதிலும் கடந்த 8–ந்தேதியில் இருந்து குடகு மாவட்டத்தை கனமழை புரட்டிப்போட்டுள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் கனமழை, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடகு மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் காட்டாற்று வெள்ளமும், வெள்ளக்காடுமாக காட்சி அளிக்கிறது.
குடகு மாவட்டத்தில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழையும், வெள்ளமும் ஒருபுறம் மக்களை மிரட்ட, மறுபுறம் மண்சரிவு சம்பவங்கள் மக்களை கடும் துயரில் ஆழ்த்தி வருகிறது. மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை தாலுகாக்களில் மலை அடிவாரத்தில் உள்ள வீடுகள் மண்சரிவில் சிக்கி இடிந்து விழுந்துள்ளன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்குமடிகேரி தாலுகா சம்பாஜே, ஆலேறி, காட்டக்கேரி, முக்கொட்லு, மக்கந்தூர் ஆகிய பகுதிகளில் மலை அடிவாரத்தில் இருந்த சுமார் 50–க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளன. ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. சுமார் 2 வாரங்களாக மிரட்டி வரும் இந்த தொடர் கனமழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. குடகு மாவட்டத்தில் நேற்று மடிகேரியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. மடிகேரி, நாபொக்லு, சுண்டிகொப்பா, பாகமண்டலா, காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் காவிரி, அட்டிஒலே உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மடிகேரி–மங்களூரு சாலையில் காட்டாற்று வெள்ளம் ஓடுவதாலும், பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மடிகேரி–சம்பாஜே ரோடு, மடிகேரி–மாதாபுரா ரோடு, குசால்நகர்–ஹாசன் ரோடு, விராஜ்பேட்டை–வயநாடு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணியில் ராணுவம்குடகு மாவட்டத்தில் சம்பாஜே, ஆலேறி, காட்டக்கேரி, முக்கொட்லு, மக்கந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம், மண்சரிவு என பல்வேறு சம்பவங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்து வந்தனர். இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் மழை, மண்சரிவில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் துறை அதிகாரிகள் என மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தன்னார்வலர்களும் சேர்ந்து, பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் இணைந்து சுமார் 3,500 பேரை மீட்டனர். இவர்கள் குடகில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 35 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர மாநிலம் முழுவதும் இருந்து குடகு மாவட்டத்துக்கு ஏராளமான உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் 2 ஆயிரம் பேர் மீட்புதொடர் கனமழை, மண்சரிவால் இன்னும் ஏராளமானோர் வெவ்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி 2–வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்தது. நேற்று, மாதாபுரா, அட்டிஒலே, முக்கொட்லு, மக்கந்தூர், தொட்டகுந்துபெட்டா, ஜோடுபாலா, சம்பாஜே, கல்லூர், தேவசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 5,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கொட்டும் மழையிலும், ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஜோடுபாலா பகுதியில், ஆபத்தான பகுதியில் சிக்கியிருந்த 4 சிறுவர்கள், ஒரு கர்ப்பிணி உள்பட 23 பேரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேலும் ஜோடுபாலா, கானனகொள்ளி பகுதிகளில் தலா ஒரு உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மாதாபுரா பகுதியில் 3 நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த தம்பதியை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். முக்கொட்லு பகுதியில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் சிக்கி உள்ளனர் என்று அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் இரவு, பகலாக முழு வீச்சில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அந்தப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பலர் உதவி செய்து வருகிறார்கள்.
2–வது நாளாக குமாரசாமி ஆய்வுபாகமண்டலா, தலைக்காவிரி பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. இதனால் அந்தப்பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீர் நேற்று முதல் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் மடிகேரியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. மடிகேரி டவுனில் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அங்கும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. முதல்–மந்திரி குமாரசாமி 2–வது நாளாக நேற்றும், ஹெலிகாப்டரில் சென்று குடகு மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் மடிகேரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது முதல்–மந்திரியின் வெள்ள நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.100 கோடி ஒதுக்குவதாக குமாரசாமி அறிவித்தார். இதையடுத்து சுண்டிகொப்பாவுக்கு மழை சேதங்களை பார்வையிட சென்ற குமாரசாமி, அந்தப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கும் நிவாரண நிதியை குமாரசாமி வழங்கி ஆறுதல் கூறினார்.
சதானந்தகவுடா, எடியூரப்பாமழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து நடிகர்–நடிகைகள் மற்றும் மக்களிடம் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து குடகு மாவட்டத்துக்கு துணிகள், உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று மழையால் பாதிக்கப்பட்ட மக்கந்தூர் பகுதியில் மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, யு.டி.காதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மத்திய மந்திரி சதானந்தகவுடா, நளின்குமார் கட்டீல் ஆகியோர் சம்பாஜே, ஜோடுபாலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். முன்னாள் முதல்–மந்திரியும், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா மற்றும் ஷோபா எம்.பி. ஆகியோர் நேற்று சுண்டிகொப்பா, மடிகேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினர்.