தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக திண்டுக்கல்லுக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்


தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக திண்டுக்கல்லுக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:00 AM IST (Updated: 20 Aug 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக திண்டுக்கல்லுக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரின் மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில தலைவர் ஸ்ரீதரன் பேசினார். இதில் மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஆழ்வாரப்பன், பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிர்வாக நலன் கருதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை 2-ஆக பிரிக்க வேண்டும். ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் வகையில் புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும். புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தொலைதூர ரெயில்கள் நின்று செல்லும் நேரத்திற்கு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களை இயக்க வேண்டும். அங்கன்வாடி பணியில் இருந்து மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு கீழ்நிலை பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஏற்ற முறையில் காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் செல்லத்தக்க வகையில் ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்று ஓய்வுபெறுவோருக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒருமாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும்.

மாதந்தோறும் வழங்கப் படும் மருத்துவப்படியை ரூ.1000-ஆக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர் இறந்துவிட்டால் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்திற்கு முறைப்படியான அங்கீகாரம் வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக முத்தையா வரவேற்றார். முடிவில் கந்தசாமி நன்றி கூறினார். 

Next Story