கொள்ளிடம் ஆற்றங்கரை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால், கிராம மக்கள் பீதி சீரமைப்பு பணிகள் தீவிரம்


கொள்ளிடம் ஆற்றங்கரை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால், கிராம மக்கள் பீதி சீரமைப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:15 AM IST (Updated: 20 Aug 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றங்கரை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கரையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொள்ளிடம்,

தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெள்ளமணல், அளக்குடி, முதலைமேடுதிட்டு, வாடி, நாதல்படுகை ஆகிய 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் அந்த கிராமங்களில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாயம் உள்ள பல கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிகளை பொதுமக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். மூங்கில் கம்புகள், மணல் மூட்டைகளை கொண்டு பலவீனமான கரை பகுதிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உள்ள அளக்குடி கிராமத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச்சுவர் வெள்ளம் மோதிய வேகத்தில் நேற்று இடிந்து விழுந்தது. இந்த தடுப்புச்சுவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததை தொடர்ந்து பொதுப்பணிதுறை அதிகாரிகளும், பொதுமக்களும் 5 லாரிகள் மூலம் மண் எடுத்து வந்து கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றங்கரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதனால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கருங்கற்கள் வரவழைக்கப்பட்டு, பொக்லின் எந்திரம் மூலம் கரையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதேபோல கரை உடையும் அபாயம் இருப்பதாக கருதப்படும் குத்தவகரை, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை ஆகிய இடங்களிலும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் கிராம மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story