கூடலூர் பகுதியில் சாலைகளில் விரிசல், பஸ் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள், சாலைகள் சேதம் அடைந்துள்ளன. கூடலூர் கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு செல்லும் சாலையின் நடுவில் 80 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதனால் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே சாலையில் கேரள எல்லை பகுதிகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து அரசு பஸ்கள், சரக்கு லாரிகள் கூடலூருக்கு இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது ஒருவழிப்பாதையில் அதிக சுமை இல்லாத 6 சக்கரங்கள் கொண்ட லாரிகள், அரசு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தொடர் மழை பெய்து வருவதால், சாலையின் அடியில் நீரோட்டமும் அதிகரித்து உள்ளது. இதனால் விரிசல்கள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் மட்டுமே கூடலூர்– கேரள மலைப்பாதையில் இயக்கப்படுகிறது.
இதேபோன்று கூடலூரில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் நெலாக்கோட்டை பகுதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர், பெரியசோலை பகுதிகளில் உள்ள சாலைகளிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூரில் இருந்து ஆத்தூருக்கும், பெரியசோலைக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது காந்திநகர், எல்லமலை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளை மேலாளர் ராஜ்குமார் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியசோலைக்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் சிக்கி கொண்டது. இதனால் பாதுகாப்பு கருதி பெரியசோலைக்கும், ஆத்தூருக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்ற இடங்களுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படுகிறது என்றார்.