பாதிக்கப்பட்ட கிராமங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார்.
சிதம்பரம்,
கீழணையில் இருந்து உபரிநீர் நேற்று அதிகளவில் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 24 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கீழகுண்டலபாடியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்திலும், மடத்தான்தோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எம்.சி.சம்பத், கலெக்டர் தண்டபாணி, போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பொதுப்பணித்துறை மூலம் வேளக்குடியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
கீழணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கீழகுண்டலபாடியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்திலும், தனியார் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பலவினமான கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதிகளை கண்டறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக சரிசெய்து வருகிறோம். பழைய கொள்ளிடம் ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரேனும் முதலையை கண்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கும், வனத்துறைக்கும் தெரிவிக்கலாம். அந்த முதலைகளை பிடிக்க வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஆற்றில் தண்ணீர் வருவதை கண்காணிக்க 7 சப்-கலெக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்க 15 படகுகள் தயார் நிலையில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நிவாரணம் வழங்கப்படும். மேற்கொண்டு அதிகளவு தண்ணீர் வந்தாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து துறை அதிகாரிகளும் இங்கேயே முகாமிட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story