கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 டன் அரிசி
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 டன் அரிசியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
கம்பம்,
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தமபாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் இருந்து 24 டன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களும், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி கம்பம்மெட்டுவில் நடந்தது.
இதில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரிசி மற்றும் நிவாரண பொருட்களை இடுக்கி ஆர்.டி.ஓ. வினோத்திடம் வழங்கினார். அப்போது தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், கம்பம் நகரசெயலாளர் ஜெகதீஸ் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
நமது சகோதர மாநிலமான கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் உள்ள மக்கள் தன்னார்வமாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 11 லாரிகளில் அரிசி 24 டன், பருப்பு 5½ டன், சீனி 1½ டன், 4 ஆயிரம் கம்பளி போர்வை மற்றும் சமையல் மசாலா பொருட்கள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 6 லாரிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு தேவையான தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், பால்பவுடர், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.கேரள மக்களின் தேவைக்கேற்ப நிவாரண பொருட்கள் தன்னார்வத்துடன் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு இவர் கூறினார்.
Related Tags :
Next Story