கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தொழிலாளி தற்கொலை
மயிலத்தில் தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலம்,
கீழ் மயிலம் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 50). மயிலம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஆட்டு இறைச்சி கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். முருகன் கடந்த ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் முருகன் திடீரென அதேபகுதியில் உள்ள இறைச்சி கடை உரிமையாளர் முனுசாமி வீட்டுக்கு சென்று, அங்கு வீட்டு முன்பு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவரிடம் தன்னை யாரோ? துரத்துவதாக கூறி, அவரது வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது, முருகன் ஆடு அறுக்கும் கத்தியால் தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதையடுத்து முனுசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முருகனின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story