பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 83 மாடுகள் பறிமுதல்


பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 83 மாடுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2018 10:00 PM GMT (Updated: 19 Aug 2018 11:14 PM GMT)

சேலம் வழியாக பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 83 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியல் செய்தனர்.

கருப்பூர், 


ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக பொள்ளாச்சிக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக சென்னையை சேர்ந்த விலங்குகள் நல வாரிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் ஏராளமான போலீசாரும், விலங்குகள் நல வாரிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த 3 மினி லாரிகளை நேற்று மதியம் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த லாரிகளில் இருந்த 83 எருமை மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து கருப்பூரில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்றனர். லாரி டிரைவர்களான ஆந்திராவை சேர்ந்த ரபி (வயது 28), வித்யாசாகர் (31), நாகராஜ் (45) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பொள்ளாச்சிக்கு மாடுகளை கொண்டு சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே எருமை மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கோசாலை முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள், உரிய அனுமதி பெற்று தான் மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது, எனவே மாடுகளை விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாடுகளை விடுவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்கள் கரும்பாலை என்ற இடத்தில் உள்ள பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைதொடர்ந்து அவர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அதை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட எருமை மாடுகள் அடைக்கப்பட்டுள்ள கோசாலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கருப்பூர் அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட எருமை மாடுகளை விடுவிக்க வேண்டும் என்று கூறி சேலத்தில் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம், பழைய பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு, கலெக்டர் அலுவலகம் அருகே, பொன்னம்மாபேட்டை ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மறியலினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story