மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் உறவினர்கள், கலெக்டரிடம் மனு


மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் உறவினர்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 20 Aug 2018 11:07 PM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் பொழிமுக பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் இனயம்புத்தன்துறையைச் சேர்ந்தவர்கள் ஜோசப் சுனில் ஜூலியன் (வயது 32). இவருடைய தம்பி டக்ளஸ் (22). மீனவர்களான இவர்கள் 2 பேரும் அண்ணன், தம்பி ஆவர். இவர்களுக்கு சொந்தமான படகை தேங்காப்பட்டணம் பொழிமுகப்பகுதியில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் நிறுத்தி வைத்திருந்தனர். கடந்த 14–ந் தேதி குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் தேங்காப்பட்டணம் கடலின் பொழிமுகப்பகுதியில் சென்று கலந்தது.

இதனால் ஜோசப் சுனில் ஜூலியன், டக்ளஸ் இருவரும் பொழிமுகப் பகுதியில் நிறுத்தியிருந்த படகை மீட்டு, பாதுகாப்பாக நிறுத்தச் சென்றபோது மழை வெள்ளம் அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது. மீனவர்களும், போலீசாரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட மீனவர்களின் உடலை தேடியதில் டக்ளஸ் உடல் கிடைத்தது. ஜோசப் சுனில் ஜூலியன் உடல் இன்னும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் நேற்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 2 பேரின் சகோதரரான இனயம்புத்தன்துறையை சேர்ந்த ஜெரேசின் மற்றும் உறவினர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டி ரமணி உள்பட பலர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஜெரேசின் கூறியிருப்பதாவது:–

நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். தேங்காப்பட்டணம் கடலுக்கு சென்றிருந்த எனது 2 சகோதரர்களில் ஒருவரான டக்ளஸ் என்பவரின் உடல் கிடைக்கப்பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சகோதரரான ஜோசப் சுனில் ஜூலியனை பற்றி இன்று வரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது சகோதரரை கண்டுபிடித்து தருமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வந்த போது மீனவர்கள் ஜோசப் சுனில் ஜூலியன், டக்ளஸ் ஆகியோரின் உருவப்படத்தையும் கொண்டு வந்திருந்தனர்.

Next Story