முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்
முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாய், பி.டி.ஆர்.-தந்தை பெரியார் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அந்த மனுக் கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘தமிழகத்தின் தேசிய மரமான பனை அழியும் நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்வளம் குறைந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் எதிர்கால தலைமுறையினர் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள். இதனால், நிலத்தடி நீரை பாதுகாக்கும் தன்மை கொண்ட பனை மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். பனை மரம் வளர்ப்பு மற்றும் பனை மரத்தில் இருந்து பெறப்படும் அனைத்து பொருட்களையும் பாதுகாக்க பனை மரம் ஏறும்தொழிலை அரசு வேலையாக அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கம்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் செயபால், தேனி ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுக்களில், ‘முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கூடுதல் தண்ணீர் நேரடியாக வைகை அணைக்கு செல்கிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ள நிலையில், 18-ம் கால்வாய் பாசன பகுதிகள் மற்றும் பி.டி.ஆர்.-தந்தை பெரியார் வாய்க்கால் பாசன பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
தற்போது முல்லைப்பெரியாற்றில் இருந்து இந்த கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். எனவே, கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க மாவட்ட கலெக்டர் ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி டெலிபோன் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
கம்பம் ஐசக் போதகர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘கம்பம் புதிய பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று கோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டு உள்ளது. இங்கு மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story