ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:30 AM IST (Updated: 21 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழக அரசு டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதேபோல் மாவட்டத்தின் பிற இடங்களான லால்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு டாக்டர் அருண் ஈஸ்வர் தலைமையிலும், புள்ளம்பாடி அரசு ஆஸ்பத்திரி முன்பு டாக்டர் செல்வநாயகம் தலைமையிலும், வளநாட்டில் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர்கள் கூறியதாவது:-

இதே கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த கட்டமாக 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடைபெறும். வருகிற 27-ந் தேதி முதல் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தமிழக அரசு சார்பில் நடக்கும் அனைத்து விதமான ஆய்வு கூட்டங்களையும் புறக்கணிப்போம்.

அடுத்த மாதம்(செப்டம்பர்) 12-ந் தேதி சென்னையில் அனைத்து டாக்டர்கள் சங்கத்தினரும் ஒன்று கூடி கோட்டையை நோக்கி ஊர்வலம் நடத்தப்படும். அதன் பிறகும் எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் செப்டம்பர் 21-ந் தேதி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகளில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story