போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

தோட்ட வேலைக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பியதால் போலீசாருடன் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தனர்.
போடி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் வேலை செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், போடி பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ஜீப்களில் சென்று வருவது வழக்கம் ஆகும்.
அதன்படி போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மீனாட்சிபுரம், விசுவாசபுரம், சொக்கனாதபுரம், கோடாங்கிபட்டி, துரைராஜபுரம், தருமத்துப்பட்டி, சில்லமரத்துபட்டி, சிலமலை, ராசிங்காபுரம் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தொழிலாளர்களை இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்து இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கிறது. இதன்காரணமாக ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்ல தமிழக தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஜீப்களில் தோட்ட வேலைக்கு செல்ல புறப்பட்டனர்.
போடிமெட்டு மலைப்பாதையில், முந்தல் சோதனை சாவடியில் போலீசார் ஜீப்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் மட்டுமே தொழிலாளர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஜீப்களில் இருந்து இறங்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலையில்லாமல் தாங்கள் கஷ்டப்படுவதாகவும், தங்களை தோட்டங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தாங்கள் வந்த வாகனங்களிலேயே தோட்ட தொழிலாளர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story