கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேட்டி


கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 20 Aug 2018 10:45 PM GMT (Updated: 20 Aug 2018 8:43 PM GMT)

தண்ணீர் வீணாவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கொள்ளிடம்,

தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாக பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு வசித்து வந்த பொதுமக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு, பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வெள்ளம் புகுந்த நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து பழையாறு கிராமத்தில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தற்போது வினாடிக்கு 2½ லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. பாசனத்துக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை. வாய்க்கால்கள், குளங்களில் தண்ணீர் இல்லை.

கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவில்லை. வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி முக்கொம்பில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

கொள்ளிடம் ஆறு சமவெளி பகுதியாக இருப்பதால் தடுப்பணை கட்ட முடியாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ள கருத்து ஏற்கத்தக்கதல்ல.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே, ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக அறிவித்தார். இதன் மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமியின் கருத்து ஜெயலலிதாவின் கருத்துக்கு முரணாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீரை வாய்க்கால்களில் திறந்து விடாமல் இருப்பதற்கு, பெட்ரோலிய மண்டலம் திட்டத்துக்கு அரசு ஆதரவாக இருப்பதே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், சிவபாலன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story