குடகு மாவட்டத்திற்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் அனுப்பி வைத்தார்


குடகு மாவட்டத்திற்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:00 AM IST (Updated: 21 Aug 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்திற்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்களை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் அனுப்பி வைத்தார். போலீசார் ஒருநாள் சம்பளம் வழங்குவதாக பரமேஸ்வர் அறிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 4 லாரிகளை குடகுக்கு அனுப்பும் நிகழ்ச்சி பெங்களூரு சதாசிவநகரில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு அந்த லாரிகளை வழியனுப்பி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு உதவ பெங்களூரு மாநகராட்சி முன்வந்துள்ளது. ரூ.3.18 கோடியை நிதியை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதில் ரூ.1 கோடி கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.2.18 கோடி குடகு மாவட்ட மக்களின் உதவிக்காக முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி பெங்களூரு கவுன்சிலர்கள் தங்களின் ஒரு மாத சம்பளம், போலீஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சித்தார்த் கல்வி குழுமங்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் தலா 2 லாரி உணவு, உடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் குடகுக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளோம்.

மேலும் பெங்களூரு மாநகராட்சி சார்பில் 100 நடமாடும் மின்னணு கழிவறைகள், 300 துப்புரவு தொழிலாளர்கள் குடகுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினையை கையாள பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் ஊழியர்களை அனுப்பி இருக்கிறோம்.

நிலச்சரிவு காரணமாக வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் மக்கள் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக விரைவாக வீடுகளை கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். மழை நின்றவுடன் இந்த வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக கர்நாடக அரசு இருக்கிறது. அதனால் நிவாரண முகாம்களில் இருக்கும் மக்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

இந்த பேட்டியின்போது மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story