100 நாள் வேலை கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை
காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கஞ்சமநாயக்கன்பட்டி, கம்பிக்குடி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் யூனியன் ஆணையாளர் கதிரேசனை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். அவர்களிடம் யூனியன் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஒரு நாளைக்கு 75 நபர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படும். மேலும் அடுத்த வாரம் வேறொரு 75 நபர்களுக்கு வேலை வழங்கப்படும். ஆக கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வழங்கப்படும் என்றார். மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று நடுதல், பண்ணைக் குட்டை அமைத்தல், தனியார் இடங்களில் வரப்பு தடுத்தல் போன்ற பணிகளும் எடுத்து செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் 5 விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு, அந்தக் கிராமத்திற்கு தேவையான பணிகள் என்ன உள்ளது என்பதை அறிந்து அதன்படி அந்த வேலைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று 100 நாள் வேலை திட்டத்தில் எடுத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.