குடகில் வடியாத வெள்ளத்தால் மக்கள் பரிதவிப்பு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேரில் ஆய்வு


குடகில் வடியாத வெள்ளத்தால் மக்கள் பரிதவிப்பு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Aug 2018 3:34 AM IST (Updated: 21 Aug 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம் இன்னும் வடியாததால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள். துணை முதல்- மந்திரி பரமேஸ்வர் நேற்று மழை சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடகு,

வரலாறு காணாத மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த 7 நாட்களாக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் படும் துயரை சொல்லி மாளாது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், நிலச்சரிவாலும் குடகு மாவட்ட மக்களை நிலைகுலைய செய்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த கட்டிடங்களும், நிலச்சரிவால் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாகவும் காட்சி அளிக்கிறது. உறவுகளையும், உடைமைகளையும் மழை வெள்ளத்துக்கு பறிகொடுத்து மக்கள் துடித்து வருகிறார்கள்.

மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை குடகு மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏராளமானோர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குடகில் முக்கொட்லு, ஆலேறி, மக்கந்தூர், ஜோடுபாலா, தொட்டகுந்துபெட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் 100-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், கடலோர காவல் படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் துறை அதிகாரிகள் என சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களுடன் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள், இளைஞர்கள், முகநூல் நண்பர்கள் என ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை குடகு மாவட்டத்தில் 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 41 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் உணவு பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

பாட்டகேரி, காட்டக்கேரி, பாலூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களை ஹாசன், மைசூரு, பெங்களூரு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்கள், துணிகள், மருந்து பொருட்களை வழங்கினார். இந்த நிலையில் நேற்றும் மீட்பு பணி தீவிரமாக நடந்தது. நேற்று நடந்த மீட்பு பணியில் 181 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். முக்கொட்லு பகுதியில் ஆபத்தான பகுதியில் சிக்கியிருந்த 40 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து மீட்டனர்.

மேலும் அதேப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டபோது அந்தப்பகுதி மக்கள் 40-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் உதவியுடன் நேற்று ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களை 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தி நிவாரண முகாமிற்கு ராணுவ வீரர்கள் அழைத்து வந்தனர். முதியவர்கள் டோலி மூலம் தூக்கி வரப்பட்டனர்.

குடகு மாவட்டத்தில் மடிகேரி தவிர மற்ற பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. ஆனால் மடிகேரியில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழை வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக குடகு மாவட்டத்தில் இன்னும் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பவில்லை. மழை வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மடிகேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனே இருந்து வருகிறார்கள். அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள், தங்களுக்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை என்றும், அரசு தங்களுக்கு உடனடியாக நிரந்தரமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள், தங்களால் நிவாரண முகாம்களில் நீண்ட நாட்கள் தங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். குடகில் மழை வெள்ளம் வடியாததால் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பரிதவித்து வருகிறார்கள். அதுபோல் மக்கந்தூர், முக்கொட்லு, பாலூர், பாடக்கேரி உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் மேடான பகுதிகளில் உள்ளனர். ஆனால் குடகு மாவட்டத்தில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், சில இடங்களில், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அவர்கள் பரிதவித்து வருகிறார்கள்.

குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று குடகிற்கு சென்றார். அவர், குடகில் சுண்டிகொப்பா, மடிகேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மழை சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்தப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், அரசு சார்பில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து பரமேஸ்வர், மடிகேரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, குடகு மாவட்டத்தில், மழை பாதிப்புகளை வேகமாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story