அகமதுநகரில் நகை கடைக்காரரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை


அகமதுநகரில்  நகை கடைக்காரரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 21 Aug 2018 4:35 AM IST (Updated: 21 Aug 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

அகமதுநகரில் நகை கடைக்காரரை சுட்டு கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புனே,

அகமதுநகரில் உள்ள கோல்பேவாடியை சேர்ந்தவர் ஷாம் சுபாஷ் (வயது36). இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் ஷாம் சுபாசும், அவரது அண்ணன் கணேசும் (56) கடையில் இருந்தனர்.

அப்போது, 8 பேர் கொண்ட கும்பல் அந்த கடைக்கு வந்தனர். திடீரென அந்த கும்பல் ஷாம் சுபாஷ் மற்றும் கணேஷ் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ஷாம் சுபாஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணேசுக்கு வயிற்றில் குண்டு பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணேசை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஷாம் சுபாசின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நகை கடைக்காரரை சுட்டு கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story