சத்தி அருகே வீட்டுமனை பட்டா கேட்டு அரசுக்கு சொந்தமான நிலத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
சத்தி அருகே வீட்டுமனை பட்டா கேட்டு அரசுக்கு சொந்தமான நிலத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மேலும் குடிசை அமைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே நஞ்சப்பகவுண்டன்புதூரில் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி அளவில் ஒட்டைகுட்டையில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான கரடு புறம்போக்கு நிலத்துக்கு வந்தார்கள். பின்னர் அந்த நிலத்தில் குடிசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் துணை தாசில்தார் குமரகுரு, கிராம நிர்வாக அதிகாரி தவுசியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் பொதுமக்கள் குடிசை அமைப்பதை தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தோம். மேலும் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு உடனே வீட்டு மனை பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘இன்னும் 10 நாட்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றனர். உடனே பொதுமக்கள் அவர்களிடம், ‘உயர் அதிகாரிகள், கலெக்டர் ஆகியோர் இங்கு வந்து உறுதி கூறினால் தான் கலைந்து செல்வோம்’ என்று கூறி அங்கேயே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.