ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அரசு அலுவலகங்களில் தரைதளம் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விலையில்லா வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்த மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அதிகாரிகள் வெளியே வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ‘‘நாங்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். சென்னிமலைபாளையம், மொடக்குறிச்சி அருகே கூரப்பாளையம், காகம் ஆகிய இடங்கள் காண்பிக்கப்பட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 3–ந் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே பட்டா வழங்கும் வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்’’, என்றனர்.
அதற்கு கலெக்டர் பிரபாகர் கூறுகையில், ‘‘நீங்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் ஒரே இடத்தில் இடம் வழங்க வேண்டும் என கேட்கிறீர்கள். இருபிரிவுகளாக கொடுத்தால் வாங்க மறுக்கிறீர்கள்’’, என்றார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள், ‘‘நாங்கள் எங்கு இடம் கொடுத்தாலும் வாங்க தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக இடம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.’’ என்றனர். அதன்பிறகு கலெக்டர் பிரபாகர், ‘‘தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு 540 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 456 வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கும், மீதமுள்ள வீடுகள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. எனவே உங்களுடைய கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்’’, என்றார். இவ்வாறு கலெக்டரும், மாற்றுத்திறனாளிகளும் பேசிக்கொண்டே இருந்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலெக்டர் பிரபாகரும், அதிகாரிகளும் அலுவலகத்திற்குள் சென்றனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பேசிய கலெக்டர் எஸ்.பிரபாகர், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து சென்னையில் உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளேன். மொடக்குறிச்சி தாலுகா நஞ்சை ஊத்துக்குளியில் 82 பேருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 15–ந் தேதிக்குள் பட்டா வழங்கப்படும். மேலும், அடுத்த நிதி ஆண்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்’’, என்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், ‘‘ஈரோடு ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி செய்து தர வேண்டும். ஏ.டி.எம். மையங்கள், மாநகராட்சி பொது கழிப்பறைகள், வங்கிகளில் சாய்வு தளம் அமைக்க வேண்டும்’’, என்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.