சின்னத்திரை சிந்திக்கட்டும்
பொழுதுபோக்குக்காக வந்ததே பெரிய திரை என்னும் சினிமா திரைப்படம். நாளடைவில் பொழுது போக்கிலும் மக்களுக்கான நல்ல அறிவுரைகள் இருந்தன. சமுதாய புரட்சிகளும், நாட்டு நலன், மொழி வளர்ச்சி, குடும்ப நடைமுறை என்ற வட்டத்துக்குள் சினிமா சுழன்றது.
நாகரிக வளர்ச்சிக்குப் பிறகு அதன் போக்கு மாறியது. திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அதிகரித்தன. தற்போது, திரைப்படத்தின் ஊடே ஆங்காங்கே ஆபாசங்களை இடைச்செருகி ஆர்ப்பாட்டங்களை விதைத்து வருகிறார்கள்.
திரைப்படங்களின் கதை இப்படி என்றால், சின்னத்திரையோ திரைப்படங்களை மிஞ்சிவிட்டன. இவை வீட்டுக்குள்ளே வந்து நம்மோடு உறவாடும் டி.வி., குடும்ப பெண்களின் நெஞ்சில் நிற்க வேண்டும் என்று எண்ணி, கண்ணீரை கடல் நீராக்கியது போதாதென ஒழுக்க சிதைவுகளுக்கும் பாலம் போட புறப்பட்டுள்ளது.
நல்ல சிந்தனைகளை விதைக்கும் நேரத்தில் அருவருப்பான காட்சிகளை இயக்குவதில் பல இயக்குனர்களும் ஒரே மாதிரி இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. முக்கியமாக கல்யாணமான ஒருவனை இன்னொருத்தி அடைந்தே தீருவேன் என்று சபதமிடுவதும், வேறு ஒருவன் மனைவியை மணமுடித்தே தீருவேன் என இன்னொருவன் முழக்கமிடுவதும் காட்சிகள்தோறும் கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றன. இதுதான் வில்லத்தனம் என்று எண்ணி எல்லோரும் தொடர்வது ஏற்புடையதா?
ஒன்றோடு நின்றால் பரவாயில்லை. எல்லா சேனல்களின் சீரியல்களுமே இப்படித்தான் இருக்கின்றன. காட்சிக்கு காட்சி குடும்பத்தை எப்படியெல்லாம் கெடுப்பது என்ற கருவை மெருகேற்றி தரப்படுவது சரியானதல்ல.
இத்தகைய போக்கால், தமிழர் தம் கலாசாரம் சிதைந்து போகாதா? பண்பாடு பண்படுமா? பாழ்ப்பட்டு போகாதா? ஏதோ ஒன்று என்றால் திருத்திக்கொள்ளலாம். தினமும் தொடர்கதையாக தொடர்ந்தால் நலமா? கற்பனைக்கு அளவுகோலே கிடையாதா? கண்ணியம் சிதைந்திட விடலாமா?
சீரியல்களில் தாங்கள் சமூகத்தில் நடப்பதை பிரதிபலிப்பதாக கூறி சமாளிக்க முடியாது. பெரிய திரையும், சின்னத் திரை சீரியல்களும் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் தேவை.
ஆபாசத்தை முடக்கி, அன்பை வளர்த்து, சிந்திக்கும் மனிதர்களுக்கு மேலும் சிந்தனையை ஊட்டி, ஒழுக்க சிதைவுகளுக்கு இடம் தரக்கூடாது. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஒரே கண்ணோட்டத்தை விட்டு, கண்ணிய பாதையில் கதைகளை இயக்கினால் தமிழ் கலாசார, பண்பாட்டுக்கு சிதைவுகள் ஏற்படாது என்பதை உணர்ந்து சின்னத்திரை சிறப்புகள் பெறட்டும்.
-கவிஞர் பொன்னகரம் சுல்தான்
Related Tags :
Next Story