வங்கி பெண் ஊழியர் வீட்டில் திருடிய வழக்கில் 2 பேர் கைது


வங்கி பெண் ஊழியர் வீட்டில் திருடிய வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2018 4:00 AM IST (Updated: 21 Aug 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் வங்கி பெண் ஊழியர் வீட்டில் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை எழுத்துக்காரன் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 35). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சுவாதி (33). இவர் திருவொற்றியூர் ராஜாக்கடையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 3–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கணவன்–மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் சுவாதி வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்கநகை, ரூ.20 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி. டிவி. ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது.

மேலும், திருட்டில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த அஜித் (வயது 22) என்பதும், பட்டதாரியான இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது. இந்தநிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்த அஜித்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்து 3½ பவுன் தங்கநகை, எல்.இ.டி. டி.வி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அஜித் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது கூட்டாளியான பாரிமுனை லிங்கி செட்டி தெருவை சேர்ந்த அதில்மவாஸ் (23) என்பவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story